*வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்*

Sep 29, 2026 - 13:02
 12
*வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் திருச்சியில் கண்டன  ஆர்ப்பாட்டம்*

வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும், காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட தலைவர் தொட்டியம் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்ட பொறுப்பாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக பங்கேற்று, தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், தலைமை தேர்தல் ஆணையரின் உருவப்படம் இடம்பெற்ற பதாகைகளை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- வாக்கு திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. காக்ரோச் ஜனதா பார்ட்டி இந்த விவகாரத்தில் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. எங்களது போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் தேர்தல் ஆணையர் பதில் கூறியுள்ளார்கள். தலைமை தேர்தல் ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவது குறித்து கேள்விக்கு:- தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான். தாம் பல முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளதாகவும், ஒரு வேட்பாளருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி கோஷம் எழுப்பச் செய்வது உள்ளிட்டவற்றை தற்போது உள்ள ஊடகச் சூழலில் எளிதாகப் பெரிதுபடுத்த முடியும். ஆனால், தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்குகள் எண்ணப்பட்ட பின்னரே உண்மையான நிலவரம் தெரியவரும். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களும், அவர்களது கூட்டணி வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள். உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஆபாசமாக பேசுவது குறித்த கேள்விக்கு:- யார் ஆபாசமாகப் பேசினாலும் அது கண்டிக்கத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் குறிப்பிட்ட கருத்துகளை தாம் இதுவரை கேட்கவில்லை. இருப்பினும் பல்வேறு தரப்பினரும் அவர் தவறாகவும் ஆபாசமாகவும் பேசுவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் இளம் வயதிலேயே அரசியலில் இருப்பதால், பொதுமக்கள் மற்றும் பிற கட்சிகளின் கருத்துகளைக் கருத்தில் கொண்டு தனது பேச்சில் மாற்றம் செய்து கொள்வது அவருக்கு நல்லது. துணை முதலமைச்சராக இருந்தவர், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார் அவருக்கு ஆலோசனை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனை சரி செய்து கொள்வது அவரது கடமை. தமிழகத்தில் பல்வேறு காலகட்டங்களில் மின்வெட்டு பிரச்சினை இருந்து வந்துள்ளது. தற்போது ஆங்காங்கே ஏற்படும் மின்வெட்டுக்கான காரணங்களை கண்டறிந்து, அவற்றை சரிசெய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வெட்டு என்பது வரவேற்கத்தக்கதோ, பாராட்டத்தக்கதோ அல்ல. மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்க முதலமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன். மதுரையில் புதுப்பிக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தது வரவேற்கத்தக்கது.மேலும், கோயில்களுக்கு சென்று வழிபடுவது, தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் வரவேற்கத்தக்கவை. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0