ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்; வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 326 ஏக்கர் கோயில் நிலம் என அமைச்சர் கூறுவது தவறு – ஶ்ரீரங்கம் மக்கள் நல சங்கத் தலைவர் மோகன்ராம் பேட்டி

Sep 21, 2026 - 22:38
 8
ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்; வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 326 ஏக்கர் கோயில் நிலம் என அமைச்சர் கூறுவது தவறு – ஶ்ரீரங்கம் மக்கள் நல சங்கத் தலைவர் மோகன்ராம் பேட்டி

ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம்; வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் 326 ஏக்கர் கோயில் நிலம் என அமைச்சர் கூறுவது தவறு – ஶ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தலைவர் மோகன்ராம் பேட்டி.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலம் தொடர்பான விவகாரத்தில், வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என அமைச்சர் ரமேஷ் உறுதியாகக் கூறுவது தவறானது என ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கத் தலைவர் மோகன்ராம் தெரிவித்துள்ளார். இது குறித்து மோகன்ராம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஸ்ரீரங்கம் கோயில் அடிமனை பிரச்சினை தொடர்பாக கடந்த 2003-ம் ஆண்டு முதல் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அமைச்சர் ரமேஷ், ஸ்ரீரங்கம் பகுதியில் தனிநபர் வசம் இருந்ததாகக் கூறப்படும் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்து மீட்கப்பட்டதாக பேசியிருந்தார். இந்த நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உரிமை தொடர்பான வழக்கு முடிவடையாத நிலையில், இந்த நிலம் கோயிலுக்கே சொந்தம் என அமைச்சர் உறுதியாகக் கூறியிருப்பது ஸ்ரீரங்கம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அடிமனை விவகாரத்தால் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அதன் பின்னணியை முழுமையாக ஆராயாமல் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பது வருத்தமளிக்கிறது. மேலும், அமைச்சர் குறிப்பிட்டுள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள சொத்து குறித்த மதிப்பீடும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தின் விலை குறித்து பதிவுத்துறை ஆவணங்களில் உள்ள விவரங்களைப் பார்த்தாலே உண்மை நிலவரம் தெரியவரும். எனவே, அந்த சொத்தின் மதிப்பு எவ்வாறு ரூ.50 கோடியாக கணக்கிடப்பட்டது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். கோயிலுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டதாக கூறப்படுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயில் நிலங்கள் தொடர்பாக முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அமைந்துள்ள இடம் தொடர்பாகவும் எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. அது கோயிலுக்குச் சொந்தமான இடம் என ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக கூறப்படுகிறது. அதேபோல், வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடமும் கோயில் நிலம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் தொடர்பாகவும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் தனிநபர்கள் பலர் பெரிய அளவில் விடுதிகள், திருமண மண்டபங்கள், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை கட்டி வருகின்றனர். அவற்றுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது என்பது குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், 1970-ம் ஆண்டு மைனர் இனாம் ஒழிப்பு சட்டம் தொடர்பான பதிவேடுகளின் அடிப்படையில் பல இடங்களுக்கு தனிநபர்கள் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக எங்களிடம் ஆவணங்கள் உள்ளன. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழும் தகவல்களைப் பெற்றுள்ளோம். 1930-ம் ஆண்டு பதிவேடுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானவை எனக் கூற முடியாது. 1970-ம் ஆண்டு நடைபெற்ற செட்டில்மென்ட் தொடர்பான ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். செட்டில்மென்ட் நடவடிக்கைகளின்போது ஆட்சேபனை இருந்தால் குறிப்பிட்ட காலத்துக்குள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கோயில் நிர்வாகம் மேல்முறையீடு செய்யவில்லை. இந்த விவகாரம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே முடிவுக்கு வர வேண்டும். எனவே, ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம் தொடர்பாக அமைச்சர் தன்னிச்சையாக எந்த முடிவுக்கும் வராமல், பொதுநல அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அதன் சட்ட நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அமைச்சரை சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளோம். சட்ட நிபுணர்களை வைத்து விவகாரத்தை முடித்து வைப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது திடீரென நிலம், கோயிலுக்கே சொந்தம் என அவர் பேசியிருப்பது ஸ்ரீரங்கம் மக்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆராய்ந்து, ஆவணங்களின் அடிப்படையில் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்பதே ஸ்ரீரங்கம் மக்களின் சார்பில் எங்களுடைய கோரிக்கை என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0